தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அடுத்த கல்வி ஆண்டுகளிலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்த தேசிய மருத்துவ ஆணையம் நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு 26 வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு மே மாதம் அந்த நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டது.
அதில் கிடைத்த 1800 கருத்துக்களை ஆராய மற்றொரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு சமர்ப்பித்த இறுதி வழிகாட்டி நெறிமுறைகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் 50% மருத்துவ இடங்களில் அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் இதனை அமல்படுத்த தொடர்பான நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது, தனியார் மருத்துவக் கல்லூரிகள் , நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 50% மருத்துவ இடங்களுக்கு அந்த மாநிலத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் மருத்துவ கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மேலும் இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
இச்சலுகையை அரசு ஒதுக்கீட்டில் இடம் வாங்கிய மாணவர்களுக்கு முதலில் வழங்க வேண்டும். ஒருவேளை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 % விட குறைவாக இருந்தால் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் வாங்கி இவர்களில் யார் அதிக தகுதி பெற்றவர்களோ? அவர்களுக்குச் சலுகை வழங்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு மாநிலத்தின் கட்டண நிர்ணயக் குழு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
மேலும் நன்கொடைகள் வசூலிக்கக்கூடாது. லாப நோக்கத்தில் கல்வி அளிக்க கூடாது எனவும் கல்வி நிறுவனத்தை நடத்தும் செலவுகள், பராமரிப்பு செலவுகள் போன்றவைகள் கட்டணத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஆடம்பர செலவுகளை கல்விக் கட்டணத்தில் சேர்க்கக் கூடாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.