ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. மேலும் டோக்கியோ பங்குச்சந்தை கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஹாங்காங்கின் பங்குச்சந்தை ஏறக்குறைய ஒரு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஷாங்காய், சிட்னி, தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன.
ஈராக்கில் உள்ள இரண்டு விமானத் தளங்களுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியான நிலையில், டோக்கியோ பங்குச்சந்தையில் நிக்கி 225 (Nikkei 225) குறியீட்டு எண் கிட்டத்தட்ட 2.5 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இருநாடுகளுக்குமிடையே நடக்கும் இந்தப் பதற்றத்தால் ஜப்பானுக்குப் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்றும் ஜப்பானிய பங்குகள் கடுமையாகப் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் பங்குச்சந்தை ஆய்வாளர் அமேமியா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், கார் நிறுவனமான டொயோட்டா பங்குகள் 1.45 விழுக்காடு சரிந்து 7,603 யென்னாகவும், சிப் தயாரிக்கும் நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் (Tokyo Electron) 1.34 விழுக்காடு குறைந்து 23,200 யென்னாகவும் வர்த்தமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நிசான் பங்குகள் 1.20 விழுக்காடு சரிந்து 628.8 யென்னாகவும் வர்த்தமாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.