தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் பேசினார். அப்போது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
அதேபோல், உயிரிழந்த வில்சனின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறிய பழனிசாமி, அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், திருவள்ளூரில் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.