மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவ-மாணவிகள் வேனில் பள்ளிக்கு வருவார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக் கொண்டு நெல்லிக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளது. இந்த வேனை பிரபு என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் ஒரு சுவரில் மோதி கவிழ்ந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வேனில் இருந்த மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் மயங்கிய நிலையில் கிடந்த ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.