மாமியார், மாமனாருடன் கூட்டுக்குடும்பத்தில் வாழ மருமகளுக்கு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கணவரின் தந்தைக்கு சொந்தமான வீட்டில் இவர்கள் கூட்டுக் குடித்தனம் நடத்தி வந்தனர். இருவரின் மோதலுக்கு பிறகு மனைவியுடன் ஒரே வீட்டில் வாழப் பிடிக்காத கணவர் தந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மருமகள் தனக்கு அந்த வீட்டில் உரிமை இருப்பதாக கூறி அதே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தன்னை வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என தொடர்ந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் வயதான காலத்தில் மாமனாரும், மாமியாரும் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமை உள்ளது. மேலும் இந்த வீடு மாமனாரின் சுய சம்பாத்தியத்தை கொண்டுவாங்கபட்டிருப்பதால் அந்த வீட்டில் வாழ்வதற்கான உரிமை மருமகளுக்கு இல்லை எனவும் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் கண்ணா, மாமனார், மாமியார் ஆகியோர் மூத்த குடிமக்கள். மகன் மற்றும் மருமகள் இடையேயான தகராறு அலைக்கழிக்கப்படாமல் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.
அவர்களின் வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் சண்டை நடைபெற்று வரும் நிலையில் அவர்களது மருமகளுடன் தங்குவது நல்லதல்ல. அதனால் கணவருடன் உள்ள திருமண பந்தம் முடிவுக்கு வரும்வரையில் மருமகள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில் அவரை மாமனார் வீட்டிலிருந்து வெளியேற்றலாம் என அறிவித்துள்ளார்.