மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்காக கன்னியாகுமரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திரும்பி வரும் வழியில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வில்சனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வில்சன், மோசஸ் செல்வராஜ், திரவியம் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வில்சன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து திரவியம் மற்றும் மோசஸ் செல்வராஜ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.