வேலைவாய்ப்புத் துறை சார்பில் படித்த வேலையற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்கள் கொரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக இளைஞர்கள் பலரும் தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமத்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுடைய கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. அதேபோல் தமிழக அரசு, மத்திய மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பல்வேறு சிறப்பு பயிற்சிக்கும் மாணவர்கள் பதிவு செய்து பயன் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் மார்ச் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய வளாகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களுடைய சுய குறிப்புடன் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.