மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகில் மறவன்குட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சந்தோஷ்(20) ஒலகடம் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகின்றார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சந்தோஷையும் மாணவியையும் வலைவீசி தேடி வந்துள்ளார். அப்போது சந்தோஷ் மாணவியுடன் வெளியூர் செல்ல வெள்ளித்திருப்பூர் பேருந்து நிலையத்தில் பஸ் ஏற நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் இடமிருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்தோசை கைது செய்த காவல் துறையினர் அவரை பவானி குற்றவியல் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் இருக்கின்ற மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.