கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 9-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் துறையில் உள்ள 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு வர வாய்ப்பிருப்பதாக எவரஸ்ட் குழுமம் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள போர்ச்சூழலால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் போர் மேலும் தீவிரமடைந்தால் ஐடி சேவைகள் கட்டணம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.