தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் பழனிசெட்டி பேரூராட்சியில் அதிமுக உதவியுடன், அமமுக தலைவர் பதவியைக் கைப்பற்றி உள்ளது. 15 வார்டுகளில் திமுக-7, அமமுக-6, அதிமுக-2 இடங்களில் வென்றிருந்த நிலையில் 8 வாக்குகள் பெற்று அமமுகவின் மிதுன் சக்கரவர்த்தி தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளார். சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தேனி அதிமுகவினர் வலியுறுத்தி வரும் நிலையில், அதிமுக உதவியுடன் அமமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.