கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது.
தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் எனவும், பின் அது இலங்கை, தமிழகம் கடற்கரையை நோக்கி நாளை (மார்ச்.5) நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் சென்னைக்கு தென்கிழக்கிலுள்ள காற்றழுத்தம் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் என வானிலை தெரிவித்து உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம் கடற்கரை பகுதியை நோக்கி நகரும் எனவும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் இன்று (மார்ச்.4) மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.