லாரி அடுத்தடுத்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது டூவிபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் காற்றாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனைத் தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் அந்தோணிதாசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் செல்வகுமார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தோநிதாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த செல்வகுமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.