அ.தி.மு.கவுடன் அ.ம.மு.கவை இணைக்க வேண்டும் என சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இதனை சரி செய்வதற்கு சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மற்றும் அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் எல்லப்பட்டி முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் பெரியகுளத்தில் இதுபோன்ற தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது சின்னமனூர் ஒன்றியத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.