விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் நகர்மன்ற துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி கட்சிகள் ஆகும். ஆனால் தி.மு.க வைச் சேர்ந்த வேட்பாளர் ஜெயபிரபா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் துணைத்தலைவர் ஜெய பிரபாவிடம் தாங்கள் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு விட்டு கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜெயபிரபா கதறி அழுது மயக்கமடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை சேர்ந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடாமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். எனவே காவல்துறையினர் போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டி ஜெய பிரபாவை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகு எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் கட்சி அலுவலகத்தை விட்டு வெளிய வந்துள்ளார். அவரிடம் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரின் காரை தாக்கியுள்ளனர். எனவே காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியுள்ளனர். அதன்பிறகு எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரனை காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் மீது அவர்கள் கல்லை தூக்கி எறிந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனேவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர்.