சாலை விபத்துக்களை தடுப்பதற்கு குழந்தைகளே பெற்றோருக்கு ஹெல்மெட் அணிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை காவல்துறையினர் எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியபோது, தமிழகத்தில் 2021-ல் 55 ஆயிரம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 14 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர், 25 ஆயிரம் பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது வாகன ஓட்டிகளிடம் பொறுப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியுங்கள் என்று காவல்துறையினர் கூறினாலும் சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் இந்நிகழ்ச்சியை நடத்துவது பாராட்டுக்குரிய ஒன்றாகும். இவ்வாறு சாலை விபத்துகளுக்கு ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமலும், மது போதையில் வாகனம் ஓட்டுவதும் தான் முக்கிய காரணம் ஆகும். தமிழகத்தில் சாலை விபத்துகள் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆகவே வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாணவனுக்கு ரசிகரானார் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருடன் டி.ஜி.பி., சைலேந்திர பாபு கலந்துரையாடினார். அப்போது ஹெல்மெட் அணிந்தால்தான் உங்களுடன் வருவேன் என்று பெற்றோரிடம் நீங்கள் கூறவேண்டும். நீங்கள் பெரியவர்களாகி வாகனம் ஓட்டும்போதும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவேண்டும் என்று அறிவுரை கூறினார். அதன்பின் சந்தோஷ் என்ற மாணவனிடம் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் விபத்தில் சிக்குவோர் நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு வாழ்க்கையே போய்விடும் என்று மாணவன் பதில் அளித்தார். அவனது பேச்சுக்காக டி.ஜி.பி., மாணவனுக்கு பரிசளித்து ‘சந்தோஷ் நான் உன் ரசிகன்’ என்று உற்சாகப்படுத்தினார்.