கோவில் கலசங்களை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 கலசங்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படிபோலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையில் ஒரு குழு சம்பவ இடத்திற்கு சென்றது. அவர்கள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் கோவிலின் வடக்கு சுவர் வழியாக ஏணி மூலம் ஏறி அம்மன் கருவறையில் இருந்த 3 கலசங்களையும் திருடி விட்டு மீண்டும் அதே வழியில் வந்துள்ளார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். அந்த விசாரணையில் ஆண்டிமடம் பகுதியில் இருக்கும் அழகாபுரம் கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டு கழிவறை தொட்டிக்குள் 3 கலசங்களையும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் அந்த 3 கலசங்களையும் திருட்டிருக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் சந்தோஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.