இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்னுடனும், அஸ்வின் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில் 2-வது நாள் இன்று தொடங்கியது.
இதில் ஆட்டத்தை தொடர்ந்த ஜடேஜா- அஸ்வின் ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இதில் அஸ்வின் அரைசதம் அடிக்க, ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது சதத்தை பதிவு செய்தார். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்து அசத்தினர். இதில்அஸ்வின் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 102 ரன்னுடன் களத்தில் உள்ளார்.