தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவஇதழ்கள் வாங்குவதற்கு புதிய குழு ஒன்றை அமைத்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகர் முனைவர் செ.காமாட்சியை ஒருங்கிணைப்பின் கீழ் 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தமிழகத்தில் பிரபலமான கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1915 நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் என்று மொத்தம் 4634 நூலகங்கள் இருக்கின்றன. இங்கு பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் நாட்டு நடப்பு மற்றும் தகவல்களை தெரிந்து கொள்வதற்காக தினமும் நாளிதழ்கள், வார இதழ்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம் உட்பட பல்வேறு வகையான புத்தகங்கள், குறிப்பு நூல்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
நூலகங்களுக்கு எந்தெந்த புத்தகங்களை வாங்க வேண்டுமென தேர்வு செய்வதற்கு தனியே தேர்வுக்குழு இருக்கிறது. இந்த தேர்வு குழுவுக்கு நாளிதழ் நிறுவனங்கள், பருவ இதழ் நிறுவனங்கள் மற்றும் புத்தங்களை வழங்க விரும்புவது குறித்து விண்ணப்பிப்பார்கள். அவ்வாறு பதிப்பகத்தினர் விண்ணப்பித்த புத்தகங்களை தேர்வுக்குழு ஆய்வு மேற்கொண்டு என்னென்ன புத்தகங்களை வாங்கலாம்..? என்ற பட்டியலை அரசிடம் வழங்கும். இதையடுத்து அரசு அதற்கு அனுமதி வழங்கும். அதன்பின் அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவஇதழ்கள், புத்தங்கள் வாங்கப்படும். ஆனால் சமீபகாலமாக இந்த தேர்வு குழுவினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், நாளிதழ்கள், புத்தகங்கள் வழங்கப்படுவதில் முறைகேடு நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவஇதழ்கள் வாங்க புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நூலகர் முனைவர் செ.காமாட்சியை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. மேலும் அவரின் கீழ் இணைய இதழ்ஆசிரியர் சமஸ், ஜெயராணி, திணேஷ் அகிரா, அ.அருண்குமார், டாக்டர் கணேசன், முனைவர் விஜயபாஸ்கர், அதிஷா வினோ, முனைவர் வீ.அரசு, சுட்டி கணேசன் யுவராஜ், கரு.ஆறுமுகத்தமிழன் போன்றோர் கொண்ட உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவினர் பொது நுலக இயக்குனரின் கருத்துருவை பரிசிலனை செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.