கடந்த 2013-ஆம் ஆண்டில் கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்த போது, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 66 டி.எம்.சி. கொள்ளளவில் புதிய அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. மேலும் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் அமைக்க வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்காமல் உள்ளது.
இந்த நிலையில் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதில் பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி மேகதாது திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.