கன்னங்குறிச்சி பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி அருகில் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் டி.ராஜேந்திரன். இவர் மனைவி சந்தியா. ராஜேந்திரன் கடந்த ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் சந்தியா கட்டிட வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் உள்ள சுவற்றில் சாமி படங்கள் மற்றும் கணவரின் புகைப் படங்களுக்கு அலங்கார மின் விளக்குகள் மாட்டி வணங்கி வந்துள்ளார்.
இப்படங்களுக்கு அருகில் இரும்பு பீரோவை வைத்துள்ளார். இந்நிலையில் மின் விளக்குகளுக்கு சென்ற மின்சார வயர் அறுந்து போய் பீரோ மீது கிடந்துள்ளது. இதை பார்க்காத சந்தியா நேற்று மாலை பீரோவை திறந்தபோது சந்தியா மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது சந்தியாவின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மின்சாரத்தை அணைத்துவிட்டு சந்தியாவை மீட்டு அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனிற்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.