தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு இம்மாதம் நடைபெற இருக்கிறது. இதில் முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றபோது, வினாத்தாள் முன்கூட்டியே சமூகவலைதளங்களில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்டாயமாக இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இம்மாதம் 2-ம் கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதனால் மீண்டும் திருப்புதல் தேர்வுகள் வினாத்தாள் லீக் ஆகிவிடுமோ என்று மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்தில் இருகின்றனர். இதன் காரணமாக 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியே வராமல் இருக்க தற்போது 3 வகையில் வினாத்தாள் தயாரிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இந்த 2-ம் திருப்புதல் தேர்வானது வருகிற 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு வேலை வினாத்தாள் லீக் ஆனால் அடுத்த வினாத்தாளை வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு முடிவு எடுத்துள்ளது.