இந்திய ரயில்வேயில், விபத்துக்களை தன்னிச்சையாக தடுக்கும் விதமாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட “கவசம்” என்னும் புதிய தொழில் நுட்ப கருவி விரைவில் அறிமுகமாக உள்ளது. அதாவது ஆர்.டி.எஸ்.ஓ என்ற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரங்கள் நிறுவனம் ரயில் விபத்துகளை தன்னிச்சையாக தடுக்கும் “கவசம்” என்ற தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளது. ரயில் தடம் மற்றும் ரயில் இன்ஜின் அருகே பொருத்தப்படும் இந்த கருவி 2 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்தால் அதனை கண்டறிந்து ரயில் இஞ்சின் இயக்கத்தை நிறுத்திவிடும். அதேபோல் சிவப்பு விளக்கு எரியும் போது திடீரென ரயில் தண்டவாளத்தின் குறுக்கே விழும் பொருள்கள் அல்லது தண்டவாளத்தின் குறுக்கே வருபவர்களை உடனடியாக உணர்ந்து இந்த கருவி ரயிலை தன்னிச்சையாக நிறுத்தும்.
இந்நிலையில் நேற்று ஆந்திராவின் செகந்திராபாத்தில் ரயில்வே தடம் ஒன்றில் “கவசம்” தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்து பார்த்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்தியாவில் தாயாரிப்போம்” திட்டத்தின் கீழ் “கவசம்” என்னும் மின்னணு தொழில்நுட்ப கருவி பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் 2,000 கி.மீ தூரம் வரும் நிதி ஆண்டிலும், அடுத்து 4,000 – 5,000 கி.மீ தூரம் ஒவ்வொரு ஆண்டிலும் கவசம் பொருத்தப்படும். உலகிலேயே மிகக் குறைந்த செலவில் ரயில் விபத்து தடுப்பு தொழில்நுட்பம் இதுவே ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.