Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் தித்திக்குமா? விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வாழையை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.  வாழையை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னை மரங்களுக்கு இணையாக வாழைப் பயிர் அதிகம் சேதம் அடைந்தது. காய்ப்பு தரும் நேரங்களில் கஜா புயல் அடித்ததால் அனைத்து வாழை மரங்களும் வேரோடு பெயர்ந்தும், வாழைத்தார்களின் கனம் தாங்காமலும் கீழே விழுந்து முற்றிலுமாக அழிந்தன.

இதனால் விவசாயிகள் பெரும் நட்டம் அடைந்தனர். கஜா புயலை கடந்து தங்களின் வாழைத் தோப்புகளை சுத்தம் செய்து புதிதாக வாழைக் கட்டை போட்டு விவசாயம் செய்யத் தொடங்கினர்.

ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமலும் அசலையும் கழிக்க முடியாமலும் தவித்து வந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பருவமழை பெய்தது. இதனால் வாழைத்தார்கள் முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வாழைத்தார்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது.

இதனால் வாழைச் சாகுபடி செய்த விவசாயிகள் முற்றிலும் அழிந்து போகக்கூடிய நிலையில் இருந்தனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களை அறுவடை செய்து, பேராவூரணி பகுதியில் உள்ள ஏலக் கடைகளில் ஏலம் விடுவதற்காக விவசாயிகள் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதற்குரிய உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

“ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் 900 வாழைக் கட்டைகள் போடலாம்.

அதில் 100 கட்டை கழிவாகி 800 கட்டை தான் வரும். 12 மாதங்கள் காத்திருந்து அதற்கு ஒவ்வொரு முறையும் தண்ணீர் கட்டி பராமரித்து காவல் காத்து அறுவடை செய்யும் வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

தற்போது பருவமழை முடிவு பெற்று, வருகிற பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார்கள் அதிகப்படியாக வரும் நேரத்தில் விளைச்சலும் குறைவாக உள்ளது.

தற்போது செலவுக்குக் கூட கட்டுப்படி ஆகவில்லை.  . எனவே அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் அளித்து பொதுமக்களும் இந்த பொங்கல் பண்டிகையில் அதிக விலை கொடுத்து வாங்கினால் மட்டுமே வாழை சாகுபடி செய்யும் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு பொங்கல் தித்திப்பாக அமையும் என்றார்.

Categories

Tech |