Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்பின் அறிவிப்பு எதிரொலி – உயர்வைச் சந்தித்த பங்குச்சந்தை

மும்பை: ஈரானுடன் அமைதியான தீர்வை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்தன.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அமெரிக்கா ஈரானுக்கிடையே ஏற்பட்ட மோதல் போர் பதற்றச் சூழலாக உருவெடுக்க தொடங்கியது. அமெரிக்கா – ஈரான் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்திவரும் நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தையை விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று சர்வதேச பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 634 புள்ளிகள் அதிகரித்து நாள் இறுதியில் 41 ஆயிரத்து 452 புள்ளிகளாக நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 190 புள்ளிகள் உயர்ந்து, 12 ஆயிரத்து 215 புள்ளிகளாக வர்த்தகமானது. பங்குச்சந்தையில் வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. ஐ.சி.ஐ.சி, ஆக்ஸிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சிறப்பான உயர்வைச் சந்தித்தன. அதேபோல் மாருதி, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான உயர்வைச் சந்தித்தன.

இந்திய பங்குச்சந்தையைப் போலவே ஆசிய பங்குச்சந்தைகளான சீனா, ஜப்பான், ஹாங்ஹாங், தென் கொரிய பங்குச் சந்தைகளும் சிறப்பான உயர்வைச் சந்தித்தன. அமெரிக்க – ஈரான் நாடுகளுக்கிடையே சுமுகநிலை நிலவும் பட்சத்தில் உலகப் பொருளாதாரம் நிலையாக இருக்கும் என பொருளாதார நோக்கர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |