கட்டிலில் படுத்து பீடி குடித்த போது தீ பிடித்ததால் உடல் கருகி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகில் காந்திபுரம் பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று வந்தவர் கருப்பசாமி(75). இவர் மனைவி இறந்துவிட்ட நிலையில் திருமணமான மகள் மகேஸ்வரி வீட்டில் தங்கியிருந்தார். கருப்பசாமிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை மகேஸ்வரி வெளியே சென்றுவிட்டதால் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கருப்பசாமிக்கு பக்கவாத நோய் இருப்பதால் கட்டிலில் படுத்துக்கொண்டே பீடி குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிலில் தீ பொறி பட்டு கட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதில் படுத்திருந்த கருப்பசாமியின் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் நம்பியூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.