உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவ படிக்க சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் தூதரகத்தின் உதவியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் இன்று தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (21), தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சேர்ந்த சிவ சுந்தரபாண்டியன் (22), மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த ஹரினி (வயது21), ஸ்ரீராம் (22), திவ்ய பாரதி (22) ஆகிய 5 பேரும் நேற்று காலை 7.30 மணி அளவில் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். அவர்களை பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர் பின்பு அனைவரும் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு வந்து சேர்ந்தது குறித்து கோவில்பட்டியை சேர்ந்த ஹரினி கூறியதாவது. “நான் உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் இருந்து சற்று தூரத்தில் விளிச்சியாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். உக்ரைனில் போர் என்று கேள்விப்பட்டவுடன் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது. ஆனால் கல்லூரி நிர்வாகம் எங்களிடம் சிறிய பிரச்சனை தான் கல்லூரி தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்கள். இதனால் நாங்கள் இந்தியாவிற்கு செல்ல முடிவு செய்யவில்லை.
இந்த நிலையில் போர் அதிகரித்ததால் கல்லூரி நிர்வாகமே எங்களிடம் வந்து இந்தியாவிற்கு செல்லும்படி கூறியது. இதனால் நாங்கள் இந்தியாவிற்கு புறப்பட்டோம். இருப்பினும் எங்களுக்கு சாப்பாடு தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் நாங்கள் சென்ற இடத்திலெல்லாம் பல்வேறு தொண்டு அமைப்பினர் எங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றினர்.
இதற்குப் பின்னர் உக்ரைன் நாட்டின் எல்லை பகுதி வரை வந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். அதற்குப் பின்னர் ருமேனியாவில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தோம். இதனைத் தொடர்ந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்து இறங்கினோம். அங்கு விமானம் இல்லாததால் ஒரு நாள் காத்திருந்தோம். இதற்குப் பின்னர் சுமார் 150 பேர் சென்னைக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 45 பேர் புறப்பட்டு வந்தோம்.
இந்த நிலையில் நாங்கள் உக்ரேனில் இருக்கும் போது எப்படி தப்பிக்க போகிறோம் என்று மிகவும் பயந்தோம். எங்களது மொபைல்களிலும் சிக்னல் கிடைக்கவில்லை அவ்வப்போது கிடைத்த சிக்னலை பயன்படுத்தி எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் குறுந்தகவல் அனுப்பினோம். இதனை தொடர்ந்து டெல்லி வந்த பிறகு எங்களுக்கு சிக்னல் கோளாறு சரியானது அதற்கு பின்பு தான் மறு ஜென்மம் கிடைப்பது போல் எண்ணினோம்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில். “எங்களது குழந்தைகள் பத்திரமாக மீட்டு எங்களிடம் ஒப்படைத்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி.மேலும் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ளனர் எனவே அவர்கள் மீண்டும் படிப்பை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தருமாறு வேண்டுகிறோம்” என்று கூறினார்கள்.