மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் உள்ள அகரப்பட்டி கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதுடைய முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற மாடு இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் முருகேசனும் அவரது உறவினர் ஒருவரும் சேர்ந்து அந்த மாட்டை தேடியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு கார்டனில் கடலை பயிரிடப்பட்டு இருந்தது. அந்த மாடு அந்த கார்டனுக்குள் சென்றிருக்கலாம் என நினைத்து முருகேசன் அந்தப் பகுதிக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது எலி வராமல் இருப்பதற்காக கார்டன் உரிமையாளர் கடலை பயிர்களை சுற்றி மின்கம்பி வேலி அமைத்துள்ளார். அந்த மின் வேலியின் மீது முருகேசன் எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அன்னவாசல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்டன் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.