கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு “ரெயின் ட்ராப்ஸ்” சமூக அமைப்பின் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் 9-ம் ஆண்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் “ரெயின் ட்ராப்ஸ்” அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகித்தார். மேலும் இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்றவரும், கர்நாடக மாநிலம் ஹென்னாலி கிராமத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலருமான துளசி கவுடாவுக்கு “ரெயின் ட்ராப்ஸ்” வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமுவுக்கு சிறந்த கலை மற்றும் ஆளுமைக்கான விருதும், இந்தியாவின் முதல் கப்பல் பைலட் தமிழகத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபருக்கு சிறப்பு அங்கீகார விருதும், மீனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், லிஜோமோல் ஜோசுக்கு சிறந்த வளர்ந்துவரும் நடிகைக்கான விருதும், இளம் சதுரங்க விளையாட்டு வீராங்கனை ரிந்தியாவுக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதும் வழங்கப்பட்டது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னாவுக்கு கருணைக்கான விருதும், மாஷா நஷீமுக்கு இளம் விஞ்ஞானி விருதும் வழங்கப்பட்டது. மேலும் மது சரணுக்கு சிறந்த தொழில் முனைவோருக்கான விருதும், கோவையை சேர்ந்த யோகா வைஷ்ணவிக்கு இளம் சாதனையாளருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தின் முதல் கனரக வாகன சேவை பொறிமுறையாளர் கண்மணி, கொரோனா காலத்தில் ஆட்டோவில் ஆக்சிஜன் சாதனம் பொருத்தி 800-க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றிய சீதாதேவி, வாய்ப்பாட்டு பாடகரும், கர்நாடக இசை கலைஞருமான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பெண் பார்வை மாற்றுத்திறனாளி காயத்ரி சங்கரன் ஆகியோருக்கு சாதனை பெண்கள் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.