இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர், “கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை பெற முயற்சி செய்துள்ளேன். முதல்கட்டமாக 2.5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அரசுப் பள்ளி வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், சுற்றுச்சுவர், கழிப்பிடம் ஆகியவற்றிற்கு செலவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று, அரியலூர்- பெரம்பலூர், துறையூர்-நாமக்கல் ஆகிய வழித்தடங்களை இணைக்கும் ரயில்வே பாதை அமைக்கக் பெரம்பலூர் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அடுத்த நிதியாண்டில் இத்திட்டத்தை செய்துதருவதாக ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்.