Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. ஒரேநாளில் 2 வீடுகளில் கைவரிசை…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஒரே நாளில் இரு வெவ்வேறு வீடுகளில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விராட்டிக்குப்பம் பகுதியில் ரகுநாத் [வயது 34] என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் நகை தொழில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரகுநாத் தான் குடியிருந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் புதிதாக குடிபெயர்ந்த வீட்டிற்கு பால் காய்ச்சிவிட்டு அந்த வீட்டில் இரவு குடும்பத்தோடு  தங்கியுள்ளனர். ஆனால் பழைய வீட்டில் இருந்த பொருள்கள் எதுவும் புதிதாக குடியேறிய வீட்டிற்கு இன்னும் எடுத்து வராமல் இருந்துள்ளனர். இதனையடுத்து ரகுநாத் மறுநாள் காலை பழைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே ரகுநாத் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன்  தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரகுநாத் விழுப்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி சாலையில் இருக்கும் மனோ கார்டன் பகுதியில் சுகுமார் [வயது 38] என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மளிகை கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுகுமார் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர் மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும் போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைகண்டு அதிர்ச்சியடைந்த சுகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 2 1/2 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், 7,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுகுமார் விழுப்புரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |