பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி மாசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு கையில் சூலம், கத்தி, தீச்சட்டி, வேப்பிலை, கபாலம், உடுக்கை போன்ற பொருட்களால் அலங்காரம் செய்தனர். அதன்பிறகு அம்மனை பல்லக்கில் எடுத்து வந்து அக்னி குண்டம் முன்பாக வைத்தனர்.
இதனையடுத்து கோவில் பூசாரி அக்னி குண்டத்திற்குள் இறங்கினார். அவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு முதுகில் அலகு குத்தி லாரி மற்றும் கார் போன்றவற்றை இழுத்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் செஞ்சி போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.