கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழக அரசு நகைக்கடனை தள்ளுபடி செய்ய திட்டமிட்டது. இதையடுத்து நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் சங்க ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன் பிறகு நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து நகைக்கடன் பெற்றவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வட்டி கட்டுவதை நிறுத்திவிட்டனர்.
இதனால் பெரும் நஷ்டத்தை கூட்டுறவுத்துறை சந்தித்துள்ளது. தற்போது நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்கள், அரசு நகைக் கடன்களுக்கான தொகையை நகைக்கடன் தள்ளுபடிக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இல்லையென்றால் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் மார்ச் 8ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம், அரசு ஊழியர்களுக்கு இணையாக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, கூட்டுறவு சங்கங்களின் நலன் கருதி 5 பவுன் நகைகடன் தள்ளுபடி திட்டத்தின் இறுதி பயனாளிகள் பட்டியலை உடனடியாக வெளியிட்டு பட்டியலின் அடிப்படையில் தள்ளுபடி தொகை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என மொத்தம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.