ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பாக புத்தக கண்காட்சி ஒன்று சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா கட்டுப்பாடுகளால் புத்தக கண்காட்சி நடத்தப்படவில்லை. ஆகவே கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்திய பின், பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வைத்து புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது.
இக்கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு அதிக அளவில் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கியுள்ளனர். மேலும் இந்திய தமிழக வரலாற்று நூல்கள், அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அதிகமான அளவில் விற்பனையாகியுள்ளன. இதனை அடுத்து இந்த ஆண்டும் வழக்கம்போல் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பாலகுமரனின் உடையார் போன்ற சரித்திர நாவல்களுக்கு அதிக அளவு வரவேற்பு இருந்துள்ளது.
இக்கண்காட்சியில் 800 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மேலும் ஏறக்குறைய 12 லட்சம் வாசகர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகங்களின் விற்பனையானது ரூபாய் 15 கோடியை நெருங்கி உள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.