சிறுமியின் கொலை வழக்கில் உள்ள பின்னணியை காவல்துறையினர் மறைப்பதாக கூறி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த காணாமல் போன 17 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்து விட்டு தும்பைப்பட்டிக்கு சென்று உள்ளார்கள். இதுதொடர்பாக 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி சிறுமியின் உறவினர்கள் கிராமமக்கள் தும்பைப்பட்டியில் உள்ள சிறுமி வீடு முன்பாக கூடியுள்ளார்கள்.
இதையறிந்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் மேலூர் தாசில்தார் இளமுருகன் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் அங்கு வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் அங்கு வந்த பாஜக மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், இந்து மகாசபா மாநில துணைத்தலைவர் செல்லத்துரை ஆகியோர் சிறுமியின் மரணத்திற்க்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர் .
அவர்களுடன் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி பொன்னி பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி கொடுத்துள்ளார். இந்த கொலை வழக்கில் உள்ள பின்னணியை காவல்துறையினர் மறைப்பதாக கூறி கோஷமிட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், பாஜக நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், பொதுமக்கள் உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி உள்ளார்கள். இதையடுத்து மாலை 5.30 மணி அளவில் பொது மக்கள் ஒன்றாக திரண்டு மதுரை -திருச்சி நான்கு வழி ரோட்டில் போலீசாரின் செயலை கண்டித்து சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.