நாகர்கோவிலில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நர்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் தக்கல் பகுதியை அடுத்த மணலிக்கரை யை சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். நாள்தோறும் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்று வரும் இவர் நேற்றைய தினம் காலை வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றுள்ளார்.
பணிக்கு வேகமாக செல்ல நினைத்து தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது நிலை தடுமாறிய அவர் நடைபாதையில் மோதி வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். அப்பொழுது அவரது தலையிலிருந்து ஹெல்மெட் கழன்று விழ ஸ்டெல்லா தலையில் பலத்த காயம் ஏற்பட, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் துரித நேரத்தில் போக்குவரத்துதுறையினரால் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது. மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.