தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டினார்.
இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் நிறுவனத்தின் சார்பாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் நிலம் சரிசெய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பர்னிச்சர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையிலுள்ள மாணிக்கம் மகால் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 7) காலை 10 மணி முதல் நடைபெற்று வருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தென் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை உயர்த்தும் விதமாக தூத்துக்குடியில் “பர்னிச்சர் பூங்கா” தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நிதிநிலை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து தொழில்முனைவோர் உடன் கலந்து பேசி இருக்கிறோம். மாநிலம் முழுவதும் சமமான, பரவலான வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசியல் நோக்கம் ஆகும். இந்தியாவின் 3-வது பெரிய துறைமுகமாக தூத்துக்குடி திகழ்வதால் “அறைகளின் பூங்காவை” இங்கு அமைக்க திட்டமிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.