அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா இன்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செய்ய இரு நாட்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போது நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும் தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்து, நெகிழ வைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் சென்ற அனைத்து இடங்களிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் வழி நெடுகிலும் நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பினாலும், உங்களின் உண்மையான அன்பாலும் மனம் நெகிழ்ந்து போனேன். இதனிடையில் அனைவரும் என்னை காண்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், உங்கல் அனைவரையும் சந்தித்து வந்த பின் விமான பயணத்தையும் மேற்கொள்ள இயலாமல் சாலை மார்க்கமாகவே பயணித்து சென்னை இல்லத்திற்கு வந்தடைந்தேன். நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை கழக தொண்டர்கள் ஒவ்வொரு கண்களிலும் என்னால் பார்க்க முடிந்தது. ஆகவே உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது.
மேலும் எல்லா பகுதிகளிலுள்ள ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என்று அனைவரும் ஒருசேர “நம் இயக்கத்தை காப்பாற்றிடவேண்டும்” என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். இவ்வாறு நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வீணாகத அடிப்படையில் உங்கள் அனைவருக்காகவும், தமிழக மக்களுக்காகவும் என் எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணித்து நிச்சயம் நிறைவேற்றுவேன். இதற்கிடையில் எந்த சோதனைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்து கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் கழகத்தை காப்போம்.
அதுமட்டுமல்லாமல் நமது இயக்கத்தை ஆரம்பித்த எம்ஜிஆர் சிறப்பாக வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களின் வழியில் அதே மக்களாட்சியை மீண்டும் அமைத்து “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை மனதில் வைத்து, தமிழக மக்களின் நலன் காப்பாற்றப்படும் என்று மனம் நிறைந்து சொல்கிறேன் என்று சசிகலா அறிக்கையில் கூறியுள்ளார்.