சின்னசேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்த மர்ம நபர்களை பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை சின்னையா கோவில்காடு பகுதி காட்டுக்கொட்டாயில் வசித்து வருபவர் சரசு. இவருடைய தங்கை பாப்பு. அவருடைய கணவர் இறந்துவிட்டதாலும் ,குழந்தை இல்லாதால் ,அக்காள் சரசு வீ்ட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்து அக்காளின் பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார்.
அவரது அக்கா சரசு உடல் நிலை சரியில்லாததால் பெங்களூருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சரசு மகன் திருமணம் 20ஆம் தேதி நடைபெற இருப்பதால் அவருடைய கணவர் செங்கோட்டையன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.அப்போது பாப்பு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மோகன் என்பவர் செங்கோட்டையன் வீட்டிற்கு சென்று உள்ளே பார்த்தபோது பாப்பு கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் செல்போன் மூலம் செங்கோட்டையனுக்கு தகவல் தெரிவித்தார் . உடனே வீட்டுக்கு வந்து பார்த்த செங்கோட்டையன் காவல்துறையினரிடம் புகார் கொடுத்த பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.