ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 5-ம் தேதி மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட 433 மையங்களில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி 1046 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 13,132 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 309 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 16 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.