Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி தொகையை உடனே வழங்க வேண்டும்…. இபிஎஸ் அறிக்கை…..!!!!!

5 பவுனுக்கு குறைவாக  நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனடியாக தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டுமென அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும் 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த, இப்போதைய முதல்வரும், அவரது மகனும் மேடைதோறும் பேசினார்கள்.

இதனால் அவர்களது பேச்சை நம்பிய சுமார் 48 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களின் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். இதையடுத்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது. அந்தப் புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் சுமார் 35 லட்சத்து 38 ஆயிரம் பேர் நகைக் கடன் தள்ளுபடிக்கான தகுதியினைப் பெறவில்லை எனவும் சுமார் 13 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் எனவும் ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை திமுக அரசு வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால் அந்தப் பணத்தைத் தராமல் அந்தந்த சங்கங்களிலுள்ள வைப்பு நிதியினை நகைக்கடன் தள்ளுபடிக்கும், அன்றாட பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியதாகச் செய்திகள் கூறுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்கள் உரம், விதை ஆகிய விவசாயக் கடன்கள் வழங்குதல், அவசர கால நகைக் கடன் வழங்குதல், முதிர்ச்சி அடைந்த வைப்பு நிதிக்கான தொகையினை உரியவருக்கு வழங்குதல் போன்ற அன்றாடப் பணிகளுக்குக் கூட போதிய நிதி இல்லாமல் திண்டாடி வருகின்றன. அவ்வாறு நிதி இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் தேவையற்ற சச்சரவுகள், வீண் விவாதங்கள் எழுந்தன. அதன்பின் கூட்டுறவு கடன் சங்கங்களே இயங்க முடியாத சூழல் உருவாகியது.

ஆகவே சங்க அலுவலர்கள் நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனே வழங்கக் கோரி திமுக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரையிலும் நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை. 5 பவுன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்த சுமார் 4,450 கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, அச்சங்கங்கள் தள்ளுபடி செய்த தொகையினை உடனே வழங்கவும், அச்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |