மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் இருக்கும் கீழ்புத்துபட்டில் இலங்கை தமிழர் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முகாமில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த 4-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் திண்டிவனம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மாணவி அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சிறுமியை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கீழ்புத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் தினேஷ்வரன் என்பவர் தன்னை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் தினேஷ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதன்பிறகு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.