அனல் மின் நிலைய ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேம்ப்-2 பகுதியில் சிவஞாபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி சிவஞானபாண்டியன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சிவஞானபாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊருக்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனுராதா தெர்மல்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.