பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் ரியாவூதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பேருந்தின் படியில் நின்று பயணம் சென்றுள்ளார். அப்போது திடீரென ரியாவூதீன் கீழே விழுந்துவிட்டார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாவூதீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோடை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரியாவூதீன் இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.