ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக ரயில் போக்குவரத்து உள்ளது. இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் மிகவும் குறைந்த விலையில், தங்களின் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் ரயில் பயணம் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதற்கான பயணச்சீட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
இந்நிலையில் ரயில் பயணத்தில் பயணிகள் மேற்கொள்ளும் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை மற்றும் அபராதத்தை தெற்கு ரயில்வேயானது வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது,
- ரயில் பயணத்தின் போது பயணச்சீட்டு அல்லது பாஸ் இல்லாமல் பயணம் மேற்கொண்டால் ரயில்வே சட்டப் பிரிவு 138ன் படி அப்போது வரை பயணித்த தூரம் அல்லது ரயிலானது புறப்பட்ட நிலையத்திலிருந்து வசூலிக்கப்படும் பயணக்கட்டணம், அபராதமாக செலுத்த வேண்டும். இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 லிருந்து வசூலிக்கப்படுகிறது.
- மேலும் ரயில் பயணத்தின்போது தேவையில்லாத காரணத்திற்காக அலாரம் சங்கிலியை இழுத்தால், அவர்களுக்கு விதி 141ன் கீழ், 1000 ரூபாய் அபராதம் அல்லது 12 மாத சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்டால் விதி 155 (அ) இன் படி 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டுமே சேர்த்து விதிக்கப்பட்டு உள்ளது.
- ரயிலின் மேற்கூரையில் பயணிகள் பயணம் மேற்கொண்டால் விதி 156 இன் கீழ் ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படுகிறது.
- ரயிலில் பயணிகளுக்கு தொல்லை கொடுத்தால், 145 (b)ன் கீழ் ஒரு மாத சிறை தண்டனையும் மற்றும் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதேபோல் குப்பைகளை ரயிலில் கொட்டினால் சட்டப்பிரிவு 145 (b) இன் படி ஒரு மாத சிறை தண்டனையும் மற்றும் 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் அங்கீகரிக்கப்படாத பொருள்களை ரயிலில் விற்பனை செய்து வந்தால், சட்டப்பிரிவு 144ன் படி ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை அபராத தொகையும் வசூலிக்கப்படுகிறது.