உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிலிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதியன்று ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13-வது நாளாக அங்கு தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. மேலும் இந்த பிரச்சனையில், அமெரிக்கா உலகநாடுகளை ரஷ்யாவிற்கு எதிராக திரட்டி வருகிறது.
இதனால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஐநா தலைமையகத்தில் பணிபுரிந்த ரஷ்ய தூதரக அதிகாரிகள், 50 பேர் அமெரிக்க அரசிற்கு எதிராக உளவு வேலையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ரஷ்யா, அமெரிக்காவை கோரியது. எனினும், அமெரிக்க அரசு அதை ஏற்க மறுத்ததோடு, அனைத்து ரஷ்ய தூதரக அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று நாட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
எனவே, ஐநா தலைமையகத்தில் பணிபுரிந்த 50 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி அவர்கள் 2 பேருந்துகள் மூலமாக நியூயார்க்கில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தனர். அதன்பிறகு, ரஷ்ய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில், தலைநகர் மாஸ்கோவை அவர்கள் சென்றடைந்தார்கள்.