உக்ரைன் நாட்டிலிருந்து 11 வயதுடைய ஒரு சிறுவன் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணம் செய்து ஸ்லோவேகியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதோடு, தலைநகரை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உலக நாடுகள், இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ரஷ்யா பின்வாங்கவில்லை.
இதற்கிடையில், உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் ஸ்லோவாகியா, போலந்து, ஹங்கேரி, பெலாரஸ் மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து 11 வயதுடைய ஒரு சிறுவன் பெற்றோரின்றி தனியாக சுமார் ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து ஸ்லோவேகியாவிற்கு சென்றிருக்கிறார்.
இச்சிறுவன் தன் குடும்பத்தினருடன் உக்ரைனில் வசித்து வந்திருக்கிறார். ரஷ்ய படைகள் போர் தொடுப்பதால், இச்சிறுவனின் தாய், யூலியா குடும்பத்தினரை பிரிந்து வர முடியாமல், தன் மகனை மட்டும் தனியாக அனுப்பியிருக்கிறார். அச்சிறுவனின் கையில் தொலைபேசி எண்களை எழுதி, எல்லையை கடந்து செல்லக்கூடிய கடவுச்சீட்டையும் கொடுத்து ரயில் வழியாக அனுப்பியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, அச்சிறுவன் தனியாக ரயிலில் பயணம் மேற்கொண்டு, நடந்து சென்று பல பேரிடம் உதவி கேட்டு, ஆயிரம் கிலோமீட்டர் தனியாக பயணித்து ஸ்லொவாகியாவிற்கு நேற்று சென்றுவிட்டார். தனியாக வந்திறங்கிய சிறுவனை அதிகாரிகள் வரவேற்றனர். இந்நிலையில், யூலியா தன் மகனை வரவேற்ற அதிகாரிகளுக்கு நன்றி கூறியிருக்கிறார்.