ஹைதி நாட்டை சேர்ந்த சுமார் 300 அகதிகளோடு அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதி என்ற கரீபியன் தீவு நாட்டில் கடந்த வருடத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிபர் ஜோவினல் மொசி, கூலி படைகளால் கொல்லப்பட்டார். எனவே, அந்நாட்டிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஹைதியை சேர்ந்த சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் ஒரு படகில் அமெரிக்காவை நோக்கி பயணித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த படகு, திடீரென்று விபத்துக்குள்ளானது.
அனைத்து பயணிகளும் நீரில் மூழ்கினர். உடனடியாக அமெரிக்க கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர காவல் படையினர், கடலில் மூழ்கியவர்களை மீட்டனர்.
அதில் சிலர், நீந்திச்சென்று கரையில் சேர்ந்தார்கள். இந்த விபத்தில் வேறு எவரும் கடலில் மூழ்கி இருக்கிறார்களா? என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் மீட்பு படையினர் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.