கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலியூர்காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் முத்து என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியம்மாள் மற்றும் முத்து வீட்டில் இருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து ராஜேந்திரனின் சகோதரி சின்னவீரம்மாள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியம்மாள் மற்றும் முத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.