பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், கடிதம் அனுப்பிய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலை எதிர்க்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உட்பட 22 தூதரக தலைவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு கூட்டாக கடிதம் அனுப்பினர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர், ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது, “எங்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் என்ன உங்களுக்கு அடிமையா? நீங்க என்ன கூறினாலும் அதை செயல்படுத்த வேண்டுமா? ஐரோப்பிய யூனியன் தூதர்களிடம் ஒரு விஷயத்தை கேட்கிறேன்.
நீங்கள் இந்திய அரசிற்கு இவ்வாறு ஒரு கடிதத்தை அனுப்பினீர்களா? இந்தியாவும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நாங்கள், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நட்பாக உள்ளோம். யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை நிறுத்த முயற்சி மேற்கொள்ளும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருக்கிறார்.