உக்ரைனிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவி தான் படிக்கும் மருத்துவ படிப்பிற்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால் எனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி புது அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்த சுகுமாறன் என்பவருடைய மகள் கீர்த்தனா உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு ஆறாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இவரை பார்த்ததும் அவர் பெற்றோர் பூரிப்பு அடைந்தனர்.
இதையடுத்து அவர் பேசியதாவது, போர் தொடங்கிய போது மெட்ரோ ரயில் நிலையத்தில் சக மாணவர்களுடன் வந்து தங்கி இருந்தேன். பல்வேறு இடங்களில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தண்ணீர் கிடைக்காமல், கடைகளில் உணவு வாங்க முடியாமல், ஏடி.எம்.மில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டேன்.
பின் அங்கிருந்து ரயில் மூலம் போலாந்து வந்து அங்கு உணவு இல்லாமல் சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டு பசியை தீர்த்துக் கொண்டேன். மெட்ரோ ரயில் நிலையத்தில் -2 டிகிரி லிருந்து -10 டிகிரி வரை கடும் குளிரில் நடுங்கி பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்து வந்தேன். உடைமைகளை விட்டுட்டு பாஸ்போர்ட் கணினி செல்போன் மட்டும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
இந்த போரில் நான் படித்த பல்கலைக்கழகம் தகர்க்கப்பட்டுவிட்டது. என்னுடைய மருத்துவ படிப்பு முடிக்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளதால் மீண்டும் படிக்க மத்திய அரசு உதவ வேண்டும். சொந்த ஊருக்கு திரும்ப உதவிய மத்திய மாநில அரசுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.